அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த ஏழு மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் முழுவீச்சிலான போருக்கு மீண்டும் திரும்பத் தயார் இல்லாத சூழல் நிலவுகிறது. இது குறித்து ஈரான் புரட்சிகரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், எங்களைப் பாதுகாப்பதிலும் பதில் தாக்குதலிலும் நிச்சயமாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும்.

உலகமே ஆச்சரியப்படும் வகையில், போர்க்களத்தில் புதிய திறன்களைக் கொண்ட புதிய ஆயுதங்களை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். எங்களின் முந்தைய இலக்குகளைப் போல அல்லாமல், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம். ஒரு நீண்டகாலப் போருக்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரான் மீது புதிய நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்த நிலையில், சமீப நாட்களில் தாக்குதல்கள் குறைந்துள்ளன. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ளன. இந்தப் போர் தற்போது ஏமனுக்கும் பரவியுள்ளது. ஏமனில் உள்ள ஈரான் ஆதரவுப் படையினர், சவுதி ஆதரவு அரசிடமிருந்து மேலும் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு, சவுதி தலைநகரான ரியாத் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.