உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் இன்று (நவம்பர் 17) கோலாகலமாக நடைபெற்றன. இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் தன்மதிப்பைப் பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 3-ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நடைபெற்ற இப்போட்டிகளில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகள் என மொத்தம் 11 பள்ளிகளைச் சேர்ந்த 215 மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

செவித்திறன் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோர் (நடக்கும் சக்தியற்றவர்கள் - உபகரணங்களின் உதவியுடன்), கைகள் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறையுடையோர் மற்றும் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கெனத் தனித்தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், நின்று நீளம் தாண்டுதல், வட்டத் தட்டு எறிதல், நடைப்போட்டி, ஓடி நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

DisablSportsNellai4.jpg

மாவட்ட அளவில் 12 வயதிற்குக் குறைவான பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அதேபோல், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மண்டல விளையாட்டு அலுவலர் சிவா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் திரளாகக் கலந்து கொண்டனர்.