அமெரிக்காவின் நியூயார்க்கில் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாடு நடைபெற்றது. 193 உறுப்பு நாடுகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஈரான் சார்பில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசஷ்கியான் கலந்துகொண்டார்.

மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியக் குடியரசான ஈரானை நான் விரைவாக அழிக்க வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பி மிரட்டல் தொனியில் பேசினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் ஒருபோதும் யாருக்கும் மண்டியிடாது, எந்த மிரட்டலுக்கும் அடிபணியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் 58 வினாடி சண்டை காட்சி வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

அவ் வீடியோவில், எதிரிகள் பாலகிருஷ்ணாவை நோக்கித் துப்பாக்கிகளால் சுடுவதும், அந்த குண்டுகளை அவர் அசால்ட்டாகத் தடுப்பதும், பின்னர் அவரைப் பார்த்துக் எதிரிகள் அஞ்சி நடுங்குவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அப்பதிவில் ஈரான் தூதரகம், "ஈரானை அழிப்பது பற்றி டிரம்ப் பேசுகிறார். ஆனால் ஈரான் பலவீனமான நாடு அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். சமீபகாலமாக அவர்கள் ஹாலிவுட் படங்களுக்குப் பதிலாக இந்தியப் படங்களைப் பார்த்து கற்பனை செய்து வருகிறார்கள் போல தெரிகிறது" எனக் குறிப்பிட்டு அமெரிக்காவைக் கேலி செய்துள்ளது. இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.