சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருநெல்வேலி சரகக் காவல்துறை துணைத் தலைவர் இரா.திருநாவுக்கரசு இரு பிரிவுகளில் வெற்றி பெற்றுப் பதக்கங்களைக் கைப்பற்றினார்.

சென்னை கமாண்டோ படை தலைமையகமான மருதம் வளாகத்தில், தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநில அளவிலான தமிழ்நாடு காவல் துறைத் துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்துகொண்ட திருநெல்வேலி சரகக் காவல்துறை துணைத் தலைவர் இரா.திருநாவுக்கரசு, ரைபிள் பிரிவில் மூன்றாம் இடத்தையும், துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் ஒட்டுமொத்தப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துச் சாதனை படைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி சரகக் காவல்துறை துணைத் தலைவருக்கு, தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் / படைப்பிரிவு தலைவர் மகேஷ் குமார் அகர்வால் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.