தூத்துக்குடியில் இன்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடியில் இன்று இரவு 9 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வானம் கருமேகங்களால் சூழ்ந்து, பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. இரவு 9.30 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர். வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தூத்துக்குடியில் தற்போது பெய்துள்ள இந்த திடீர் மழையானது விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.