தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தூத்துக்குடி மாவட்ட கவுன்சில் மற்றும் இணைப்புச் சங்கங்கள் சார்பில், மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி விஇ ரோடு 5-வது தெருவில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்குத் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் முருகன், செயலாளர் சுசி ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் வேல் முருகேசன், துணைச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பேரவைச் செயலாளர் அழகிரி, மாநிலப் பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இப்போராட்டத்தின் போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்; மின்சாரத் திருத்தச் சட்டம் 2025-ஐத் திரும்பப் பெற வேண்டும்.

விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்; காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தத் தீவிர சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு இணைப்புத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.