பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகள் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி, புரட்டாசி 4-வது சனிக்கிழமையான இன்று அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவப் பெருமாளுக்கு வாசனை திரவியங்கள், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்புத் திருமஞ்சனமும், வண்ணமயமான புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டன.
இன்றைய சிறப்பு வழிபாட்டில், அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோலத்தில் கம்பீரமாக எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நைவேத்தியங்களுடன் சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றன.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், அதிகாலை முதலே தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

