தூத்துக்குடியில் கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் மெலிண்டா சூசன் தாமஸ் வரவேற்புரை ஆற்றி, பள்ளியின் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி சிறப்புரை ஆற்றினார். பின்னர், தூத்துக்குடியில் முதல்முதலாக கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழைத் திருச்சி தென் மண்டல ஐ.எஸ்.ஓ. மேலாளர் கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணியிடம் வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா சிறப்பு மலரை மதுரை சுவாமி ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனர் உதயம் வெளியிட, பள்ளியின் செயலாளர் டி.ஆர். தமிழரசு பெற்றுக் கொண்டார். விழாவில், பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கௌரவ விருந்தினர் பத்மா உதயம் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், "நாம் இரவல் பெற்ற பூமியின் எதிரொலிகள்" என்ற கருப்பொருளில் மாணவர்கள் நிகழ்த்திய நாடகம் விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், எதிர்காலத் தலைமுறைக்காகப் பூமியைப் பேண வேண்டிய நமது பொறுப்பையும் இந்நாடகம் சிறப்பாக எடுத்துரைத்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநர் சி.எஸ். ராஜேந்திரன், பள்ளிப் பொருளாளர் ஏ.எஸ்.எம். செந்தில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளி துணை முதல்வர் கிறிஸ்டோபெல் மோத்தா நன்றி கூறினார்.

