தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே. வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் அருண் விஜய் (30). இவர், பெண் ஒருவருக்குத் தனது செல்போன் மூலம் ஆபாசக் குறுந்தகவல் அனுப்பியதுடன், தொலைபேசியில் அழைத்தும் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்தப் பெண் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இருப்பினும், அருண் விஜய் தொடர்ந்து அவதூறாகப் பேசியதுடன், அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், இது குறித்துக் கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய கழுகுமலை போலீசார், அருண் விஜய்யை நேற்று கைது செய்து மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.