தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,000 பின்னேற்பு மானியம் வழங்கப்படும் எனப் புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகுந்த வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுப் பழக்கம் தற்போது வீடுகள் மற்றும் உணவகங்களில் பரவலாகத் தொடங்கியுள்ளது. இதன் தேவையைக் கருத்தில் கொண்டு, சிறுதானிய சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, புதூர் வட்டாரத்தில் குதிரைவாலி, சாமை, தினை உள்ளிட்ட சிறுதானியங்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பின்னேற்பு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.8,000 வழங்கப்படும். மேலும், உழுதல், மருந்து தெளித்தல் மற்றும் பறவை விரட்டுதல் ஆகிய இடைக்காலப் பராமரிப்புச் செயல்பாடுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்களுக்கான விதை மற்றும் இடுபொருள் விநியோகமும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது."

"இத்திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியம் மற்றும் 100 சதவீத மானிய விநியோகம் பெற விரும்பும் ஆர்வமுள்ள விவசாயிகள், முதலில் 'உழவன்' (Uzhavan) செயலியில் தங்களது ஆதார் எண்ணுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து, நில உடமை மற்றும் சாகுபடி செய்ததற்கான உரிய வருவாய் ஆவணங்களான சிட்டா, அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகியவற்றை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், உதவித் தோட்டக்கலை அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் நேரில் கள ஆய்வு செய்த பின்னர், தகுதியுள்ள விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்கப்படும். எனவே, புதூர் வட்டார விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்" என தெரிவித்துள்ளார்.