தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் வருவாய் கிராமம், புல எண் 454-ஐ ஒட்டி அமைந்துள்ளது சேர்வைக்காரன்மடம் ஊராட்சி நம்மாழ்வார் நகர் ஆகும் .மேற்படி செந்தியம்பலம் - நம்மாழ்வார் நகர் அருகே புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயற்சி நடைபெற்று வருவதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில், முன்மொழியப்பட்டுள்ள இடத்திலிருந்து நம்மாழ்வார் நகர் குடியிருப்பு சுமார் 50 மீட்டர் தொலைவிலும், நம்மாழ்வார் தேவாலயம் மற்றும் விகாசா பள்ளி சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்குள்ளும் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் நெசவாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், மாணவர்கள், முதியோர்கள் போதிய பேருந்து வசதி இல்லாததால் தினமும் இச்சாலையில் நடந்து செல்கின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் மதுபோதை தகராறு, அநாகரிகச் செயல்கள், விபத்துகள் அதிகரித்து பெண்கள், மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஏற்கனவே காமராஜர் நகரில் செயல்பட்ட டாஸ்மாக் கடை எண் 10144, மக்கள் போராட்டத்தால் 2026-இல் அகற்றப்பட்டது. அதே சாலையில் சில நூறு மீட்டர் தள்ளி மீண்டும் கடை திறக்க முயற்சிப்பது தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் உருவாக்கும்.
அரசாணை (நிலை) எண் 129 (12.05.2026)-ன்படி மாநிலம் முழுவதும் 717 கடைகள் மூடப்பட்ட நிலையில், இங்கு புதிய கடை திறப்பது அரசின் கொள்கைக்கு முரணானது என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு மற்றும் டாஸ்மாக் விதி 8(3)-ன்படி பொதுமக்கள் எதிர்ப்புள்ள இடத்தில் கடை அமைக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
எனவே, வருவாய், கலால், காவல்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, இத்திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுவை சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில் நம்மாழ்வார் நகர், செந்தியம்பலம், காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் அளித்தனர்.

