கனமழையில் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு அறிவித்த ரூ.4 லட்சத்தில், நிலுவையில் உள்ள மீதித் தொகையான ரூ.2 லட்சத்தை உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரி ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 40 பயனாளி குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 40 பயனாளி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பெய்த கனமழையில் எங்களது வீடுகள் முழுவதும் இடிந்து சேதமடைந்துவிட்டன. சேதமடைந்த வீடுகளை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, இடிந்த வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் எங்களது பெயர்களைப் பதிவு செய்து அரசாணை வழங்கப்பட்டது.
அதன்படி, கடந்த 13.03.2024 தேதியிட்ட அரசாணை மூலம் தலா ரூ.4,00,000 (நான்கு லட்சம் ரூபாய்) வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசால் ரூ.2,00,000 (இரண்டு லட்சம் ரூபாய்) மட்டுமே எங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வெளியில் கடன் வாங்கிப் புதிய வீடுகளை முழுவதுமாகக் கட்டி முடித்துக் குடியிருந்து வருகிறோம். மீதித் தொகை வராததால் கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, மாவட்ட ஆட்சியர் கருணைகூர்ந்து எங்களுக்கு வரவேண்டிய மீதிப் பணமான ரூ.2,00,000 (இரண்டு லட்சம் ரூபாய்) உடனடியாகக் கிடைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

