ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (நவம்பர் 22) பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாகத் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன.
விடுமுறை தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் கார்கள், வேன்கள், பேருந்துகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு வருகை தந்தனர். நேற்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடித் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சுபமுகூர்த்த தினமான நேற்று கோயில் வளாகத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

