தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் மறைந்த ஆனந்தராஜ். இவரது மகன் யுவன் சங்கர் ராஜா (18), திருநெல்வேலி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் முத்துமாரியின் (45) பராமரிப்பில் யுவன் சங்கர் ராஜா வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை யுவன் சங்கர் ராஜா தனது தாய் முத்துமாரியுடன் இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூர் வழியாகத் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். சில்லாநத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் இவரது வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் யுவன் சங்கர் ராஜா, அவரது தாய் முத்துமாரி மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நயினார்புரத்தைச் சேர்ந்த கார்மேகன் மகன் லட்சுமணன் (30) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யுவன் சங்கர் ராஜா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முத்துமாரி மற்றும் லட்சுமணன் ஆகியோருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்துப் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.