தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது முகநூல் பக்கத்தில் கேரளா லாட்டரி தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய அவர், ஆன்லைன் மூலம் அந்த லாட்டரியை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், சில நாட்களில் அவரைச் செல்போனில் தொடர்பு கொண்ட 3 மர்ம நபர்கள், அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பரிசுத் தொகையைப் பெறுவதற்கான கட்டணங்கள் எனக் கூறி அவர்கள் கேட்டதையடுத்து, அதனை உண்மை என நம்பிய அந்த ஊழியர் 3 வெவ்வேறு செல்போன் எண்களுக்கு ஜிபே செயலி மூலம் சுமார் ரூ.3.50 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பி இரண்டு மாதங்களாகியும் குறிப்பிட்ட பரிசுத் தொகை அவரது வங்கிக் கணக்கிற்கு வந்து சேரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அந்த 3 மர்ம நபர்களின் செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவை அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனியார் நிறுவன ஊழியர், உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு மோசடி நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

