தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு மற்றும் சிங்கித்துறை கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'பேச்சாளை' எனப்படும் கரையோர மீன்கள் அதிக அளவில் உயிருடன் கரை ஒதுங்கின. வினோத நிகழ்வாகப் பார்க்கப்பட்ட இச்சம்பவம் குறித்து, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் நிலத்தியல் துறைப் பேராசிரியரும், உலகின் தலைசிறந்த 2 சதவீத ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான செல்வம் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்துப் பேராசிரியர் செல்வம் கூறியதாவது: "கடலில் மீன்கள் உயிருடன் கரை ஒதுங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போது கடல் சுற்றுச்சூழல் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்து வருகிறது. முதலாவதாக, கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மீன்களுக்குச் சுவாசிக்க முடியாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். இரண்டாவதாக, நச்சுத்தன்மை கொண்ட தீங்கு விளைவிக்கும் பாசிகளின் பெருக்கம் (Algal Bloom) காரணமாக இருக்கலாம். மூன்றாவதாக, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், அம்மோனியா, நைட்ரேட் போன்ற அமிலங்கள், உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை மாற்றம் ஆகிய காரணங்களும் உள்ளன.
குறிப்பாக, புவி வெப்பமயமாதலுடன் இணைந்து தற்போது 'சூப்பர் எல்-நினோ' நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்த வெப்பநிலை அழுத்தம் காரணமாக நடப்பாண்டில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. வழக்கமாகச் சில மீன் இனங்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும்போது கடல் வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், வெப்பநிலை அதிகரித்துள்ளதால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, மீன்கள் குளிர்ச்சியான பகுதியைத் தேடிப் பாதை மாறி நகர்ந்திருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதை மாறியபோது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அவை கரை ஒதுங்கியுள்ளன.
"பாதை மாற்றம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால்தான் இத்தகைய நிகழ்வு நடைபெற்றுள்ளது. எனவே, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரைப் பகுதிகளில் கடல் நீர் மாதிரிகள் மற்றும் மீன்களின் செவுள் பகுதிகளை உடனடியாகச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கடல் நீரின் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையைத் துல்லியமாக அளவீடு செய்து, அந்தத் தரவுகளை ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கான உறுதியான காரணங்களைத் தெரிவிக்க முடியும்" என அவர் கூறினார்.

