தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (33). மீனவரான இவருக்குச் சொந்தமான இரண்டு படகுகள் இன்று (நவம்பர் 22) மாடசாமிபுரம் கடற்கரையில் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.

இது குறித்து ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாடசாமிபுரத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர், முத்துராமன் என்பவரின் சகோதரருக்குப் பெண் பார்க்கப்பட்டிருந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, முத்துராமன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து இந்தப் படகுகளுக்குத் தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மாடசாமிபுரத்தைச் சேர்ந்த முத்துராமன் (30), முத்துவிஜய் (20), கமலேஷ் (19) மற்றும் குலசையைச் சேர்ந்த சின்னதுரை (28) ஆகிய நான்கு பேரையும் குலசேகரப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.