திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆன்மீக மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் தனிமனிதத் துதி பாடவும், ஆன்மீகத்திற்குத் தொடர்பில்லாத கோஷங்களை எழுப்பவும் தடை விதித்து கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் வேல்முருகன் ஆகியோர், முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு 'அரோகரா' என முழக்கமிட்டனர்.
இந்த விவகாரம் பொதுவெளியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் கண்டனத்திற்கும் உள்ளானது. காவல் நிலையத்திலும் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இரு பாடகர்களும் இச்செயலுக்கு வருத்தமும் விளக்கமும் அளித்திருந்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதி பாடத் தடை விதித்து கோயில் நிர்வாகம் நேற்று (நவம்பர் 21) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் எழுப்பிய சில கோஷ வாக்கியங்கள் பொதுவெளியில் ஏற்படுத்திய விமர்சனங்கள் கோயிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.
எனவே, இனிவரும் காலங்களில் கோயிலால் ஒழுங்கு செய்யப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் இறைபக்தி வசனங்கள் மற்றும் இறைபக்திப் பாடல்களைத் தவிர, ஆன்மீகத்திற்குத் தொடர்பில்லாத எந்தவொரு கோஷத்தையோ, தனிமனிதத் துதிப் பாடல்களையோ கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

