தமிழகத்தின் முக்கியப் பொருளாதார மற்றும் துறைமுக மையங்களான சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களை ஒருங்கிணைக்கும் தொழில்வழித்தட விரைவுச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு, ஆலோசகரைத் தேர்வு செய்யத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தின் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தொலைநோக்குப் பார்வையுடன் மேம்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை 'மாஸ்டர் பிளான் 2036' உருவாக்கப்பட உள்ளது. இதனுடன், சென்னை - கோவை - தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பிரம்மாண்டத் தொழில்வழித்தட விரைவுச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக சாலை அடர்த்தி கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 2,70,729 கிலோமீட்டர் நீளத்திற்குச் சாலைகள் உள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் 6,805 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் 12,291 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள் 12,034 கி.மீ., இதர மாவட்ட சாலைகள் 42,057 கி.மீ. மற்றும் ஊராட்சி, கிராமச் சாலைகள் 1,97,542 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை மட்டும் சுமார் 73,187 கி.மீ. சாலைகளைப் பராமரித்து வருகிறது.

சாலைகளின் அளவை விட வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 'மாஸ்டர் பிளான் 2036' என்ற திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியச் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் களைந்து, வெளிப்படைத்தன்மையுடனும் செலவுத் திறனுடனும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வாகன உற்பத்தி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையமான சென்னை; பொறியியல், மோட்டார், பம்ப் மற்றும் ஜவுளி உற்பத்தி மையமான கோவை (மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம் தொழில் மண்டலங்கள்); ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் சரக்கு கையாளுதலில் முக்கிய இடம்பிடித்துள்ள துறைமுக நகரமான தூத்துக்குடி ஆகிய 3 நகரங்களையும் இணைக்கும் வகையில் தொழில்வழித்தட விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது.

தற்போது இந்த நகரங்களுக்கு இடையேயான நீண்ட தூரப் பயணங்களில் பல்வேறு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. புதிய தொழில் விரைவுச்சாலை அமைக்கப்பட்டால், முக்கியத் தொழில் மையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சரக்கு கையாளும் மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுப் பயண நேரம், எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டபடி, சென்னை - கோவை - தூத்துக்குடி தொழில்தட விரைவுச்சாலை திட்டத்தின் ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் ஆலோசகரைத் தேர்வு செய்யத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தற்போது டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் சாலை அமையும் வழித்தடம், மொத்த நீளம், இணைக்கப்படும் தொழில் மையங்கள், தேவைப்படும் நிலத்தின் அளவு மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளன.