திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, முருகப்பெருமானுடன் இணைத்து முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பெயர்களைக் குறிப்பிட்டு 'அரோகரா' கோஷம் எழுப்பப்பட்டதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது: "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது பக்தர்கள் முருகப்பெருமானைப் போற்றி 'அரோகரா' என்ற பக்தி முழக்கத்தை எழுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது; அதனைப் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தோம்.

அந்த வீடியோவில், முருகப்பெருமானைப் போற்றி மட்டுமின்றி, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டு 'அரோகரா' என முழக்கமிட்டுள்ளனர். பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோரும் அந்தக் குழுவினருடன் இணைந்து 'அரோகரா' கோஷங்களை எழுப்பினர்; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பதவி வகிப்பவர்களைப் புகழ்ந்து உள்நோக்கத்துடன் 'அரோகரா' கோஷத்தை எழுப்பியது மத நம்பிக்கையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். இவ்வாறு கோஷம் எழுப்பியவர்களைக் கோயில் நிர்வாகம் அழைத்திருந்ததா? அதற்கான செலவுத் தொகையை யார் வழங்கியது? என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், இதற்குத் துணை போன உரிய அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற ஆன்மீக விழாக்களை அரசியல் மேடையாக மாற்றுவதைத் தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என மனுக்களில் கோரப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.