தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் ஆனந்தகுமார் (27). கூலித் தொழிலாளியான இவர், கடந்த வியாழக்கிழமை கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது பேன்ட் பையில் வைத்திருந்த செல்போன் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இது குறித்து ஆனந்தகுமார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பேருந்து நிலையப் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இத்திருட்டுச் சம்பவத்தில் கடலையூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் லிங்கம்பட்டி அருகேயுள்ள சென்னையம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் மகாராஜன் (23) ஆகியோருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.