தூத்துக்குடி மேற்கு காமராஜ் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரிபிரசாத் என்ற 'பிஸ்டல்' ஹரி மற்றும் தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த வின்சென்ட் மகன் செல்வபூபதி (25) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். ஒரு குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக இருவரையும் போலீசார் தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 2-ஆம் எண் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

அப்போது இருவரையும் பார்ப்பதற்காக அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஏட்டு கணேசன், இருவரையும் யாரும் பார்ப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வபூபதி ஆகியோர் ஏட்டு கணேசனைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஏட்டு கணேசன் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய தென்பாகம் போலீசார், ஹரிபிரசாத் மற்றும் செல்வபூபதி ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.