தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள து.அருணாசலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன் மாடசாமி, சீலைக்காரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று (நவம்பர் 22) வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை 6 மணி அளவில் மங்கள இசை மற்றும் திருப்பள்ளி எழுச்சியுடன் வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து கருவிக்குட வேள்வி, நாடி சந்தனம் மற்றும் நற்றமிழால் நான்காம் கால வேள்விப் பூஜைகள் நடத்தப்பட்டு, நிறைஅவி நல்கல் மற்றும் பெரும் பேரொளி வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள இசை மற்றும் சிவகைலாய வாத்தியங்கள் முழங்க யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர், காலை 9.30 மணி அளவில் வேத மந்திரங்கள் மற்றும் நற்றமிழ் மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ பொன் மாடசாமி, அருள்மிகு சீலைக்காரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டுத் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்குக் கடவுள் மங்கலம் செய்தல், பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் து.அருணாசலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

