தூத்துக்குடி மாநகராட்சியில் வாராந்திர தூய்மைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் தூய்மைப் பணிப் பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகரின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை மற்றும் சுகாதாரக் குப்பை என 4 வகையாக மூலத்திலேயே தரம் பிரித்து வழங்கும் முறையைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வணிக நிறுவனங்களில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தவும், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து உடனுக்குடன் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகளவில் குப்பைகளை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்களைக் (Bulk Waste Generators) கணக்கெடுத்து, அவர்களது குப்பை அகற்றும் முறையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், கலப்பு குப்பைகளைக் குப்பைக் கிடங்கிற்கு அனுப்புவதை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்றும், நுண் உரக்கிடங்குகளில் (MCC) ஈரக் குப்பைகளை முறையாகப் பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை மறுசுழற்சியாளர்களுக்கு அனுப்புதல் ஆகிய பணிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆணையாளர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும், பொது இடங்களிலோ, பக்கிள் ஓடையிலோ (கால்வாயிலோ) அல்லது மழைநீர் வடிகால்களிலோ குப்பைகளைக் கொட்டாமல், மாநகரத்தைத் தூய்மையாகப் பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

