தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் பாசனத்தில் அமைந்துள்ள கடம்பாகுளத்தின் 4, 5, 6, 7-ஆம் மடைப் பாசனக் கால்வாய்களைத் தூர்வாரக் கோரியும், ஆரம்பகட்ட விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (நவம்பர் 23) கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் பாசனத்திற்கான தென்காலில் உள்ள கடம்பாகுளத்தின் 4, 5, 6, 7 ஆகிய மடைப் பாய்மானக் கால்வாய்களைத் தூர்வாரக் கோரியும், 7-வது மடை குருக்காட்டூர் ஓடையில் அமைந்துள்ள 'முச்சந்து' பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சீரமைத்துத் தடுப்புச்சுவர் கட்டக் கோரியும், தேமான்குளம் 3 மற்றும் 4-வது பாய்மான மடைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் செப்பனிடக் கோரியும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது ஆரம்பகட்ட விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளதால், உடனடியாகக் கடம்பாகுளம், மருதூர் மேலக்காலில் உள்ள தென்கரைக்குளம் மற்றும் அதன் கீழ் உள்ள தேமான்குளம் உள்ளிட்ட ஐந்து குளங்களுக்கும் விவசாய ஆரம்பகட்டப் பணிகளுக்காகத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்".

பலமுறை முறையிட்டும் விவசாயத்திற்கான காலம் நெருங்கிவிட்ட நிலையில், வேறு வழியின்றி நீர்வளத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வரும் 25.11.2026 (புதன்கிழமை) அன்று தென்திருப்பேரையில் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.