தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் அந்தோணிராஜ் (30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அதே ஊர் தாளமுத்துநகரைச் சேர்ந்த உதயசூரியன் (29) என்பவர் அந்த நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடி அண்ணாநகர் 5-வது தெருவைச் சேர்ந்த சாமுவேல் என்பவர், அந்நிறுவனத்தின் போல்டன்புரத்தில் உள்ள குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பணிக்குப் போதையில் வந்ததாகக் கூறி, சாமுவேல் சில நாட்களுக்கு முன்பு பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தாம் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு மேலாளர் அந்தோணிராஜ்தான் காரணம் என்று நினைத்த சாமுவேல், நேற்று (நவம்பர் 22) போல்டன்புரத்தில் உள்ள குடோனுக்கு அரிவாளுடன் வந்து ரகளையில் ஈடுபட்டார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவின் முன்பக்கக் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய அவர், பின்னர் அரிவாளுடன் மேலாளர் அந்தோணிராஜ் மீது பாய்ந்து தாக்க முயன்றார்.

இதனைக் கண்ட ஓட்டுநர் உதயசூரியன், சாமுவேலைத் தடுக்க முயன்றார். அப்போது சாமுவேல் அரிவாளால் உதயசூரியனின் கையில் கீறி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து மேலாளர் அந்தோணிராஜ் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அரிவாளுடன் ரகளை செய்து ஓட்டுநரைத் தாக்கிய முன்னாள் ஊழியர் சாமுவேலைத் தேடி வருகின்றனர்.