தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். மேலும், சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் சங்குகுளி மீன்பிடிப்பிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை திரேஸ்புரத்தில் 7-க்கும் மேற்பட்ட சங்குகுளி மீனவர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து நிர்வாகி முகமது மைதீன் கூறுகையில்: "திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சங்குகுளி மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில், கடலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் துறைமுகப் பகுதியிலேயே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் அவசரக் காலங்களில் விபத்து ஏற்பட்டால் மீனவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையும், படகு பழுதுபார்ப்பு மற்றும் ஐஸ் இறக்குவதற்கான கிரேன்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சங்குகுளி மீனவர்கள் சங்கம் சார்பில் மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

கடலுக்குச் செல்லும் மீனவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.