தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள் தொடர்பான மாவட்ட அளவிலான மாபெரும் சிறப்புத் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் வரும் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

25% முதல் 35% வரை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் திட்டங்கள்:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கான சிறப்புத் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வரும் 26.11.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் வியாபார நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியமும், புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்குப் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு 35 சதவீத மானியமும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (TWEES) கீழ் மகளிருக்கு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும், கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய விரும்புவோருக்குக் கலைஞர் கைவினைத் திட்டத்தின் (KKT) கீழ் 25 சதவீத மானியமும், பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் உணவுப் பொருள் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 35 சதவீத மானியமும் கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள்

இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஆதார் அட்டை, பான் (PAN) அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுச் சான்றிதழ் (TC), விலைப்புள்ளிப் பட்டியல் (Quotation) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வங்கியாளர்கள் இம்முகாமில் நேரடியாகக் கலந்து கொள்கின்றனர். உரிய ஆவணங்களுடன் வரும் தகுதியுள்ள நபர்களுக்கு வங்கியாளர்களால் அன்றே கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0461-2340152 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.