திசையன்விளை அய்யன்குளம், கைலாசபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த குழந்தைவேலு மகன் முத்துகிருஷ்ணன் (வயது 38). இவர் கூடங்குளத்தைச் சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் ஒன்றில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை கூடங்குளத்திலிருந்து எரிவாயு சிலிண்டர்கள் பாரம் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். ஆறுமுகநேரி ரயில்வே கேட் அருகே அஞ்சல் நிலையம் முன்பு அதிகாலை 5 மணியளவில் லாரி வந்து கொண்டிருந்தபோது, எதிரே திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த காரியான் மகன் சேகர் (54) ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் கார் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இதில் காரில் பயணித்த திருச்சி துறையூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சேகர் (54), ரகுநாதன் (45), சேகர் மகன் தீபன்குமார் (28), லட்சுமணன் மகன் பூகேஷ் (14), ரகுநாதன் மகன் தரன் (7) மற்றும் லாரி ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் (38) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.