தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதக் காலத்தில், உள்நாட்டுச் சரக்குப் போக்குவரத்தில் 83.53 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு 32.27 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 63.15 லட்சம் டன் உள்நாட்டுச் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், தற்போது 83.53 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக, உள்நாட்டு நிலக்கரி கையாளுதல் 50.58 சதவீதமும் (67.04 லட்சம் டன்), உலோகக் கசடு (Slag) கையாளுதல் 67.74 சதவீதமும் (2.11 லட்சம் டன்) அதிகரித்துள்ளது. இதேபோல், உள்நாட்டுக் கப்பல்களின் வருகையும் 123-லிருந்து 170-ஆக உயர்ந்து 38.21 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

துறைமுகத்தின் ஒட்டுமொத்தச் சரக்குக் கையாளுதல் 260.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ள நிலையில், அதில் உள்நாட்டுச் சரக்குகளின் பங்கு மூன்றில் ஒரு பங்காக (32.06%) அதிகரித்துள்ளது.

கடல்வழிப் போக்குவரத்து மூலம் குறைந்த செலவில் சரக்குகளைக் கையாள்வதன் மூலம் இந்தியத் தொழில்துறையின் போட்டித்திறனை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த் குமார் புரோகித் தெரிவித்துள்ளார்.