திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இந்து இயக்க நிர்வாகிகளைக் காவல்துறையினர் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும் வருகின்றனர். அந்த வகையில், இந்து மக்கள் கட்சி - தமிழகம் மாநிலச் செயலாளர் வசந்தகுமாரும் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாநிலச் செயலாளர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், தமிழகம் முழுவதும் உள்ள இந்து இயக்க நிர்வாகிகளைச் சர்வாதிகாரப் போக்கோடு கைது செய்து வரும் தமிழகக் காவல்துறையை இந்து மக்கள் கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்துக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டி, இதுபோல எத்தனை சர்வாதிகாரப் போக்கையும் சந்திக்க ஒவ்வொரு இந்துத் தொண்டரும் என்றுமே தயாராகத்தான் இருப்பார்கள். எப்படி இருந்தாலும், இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவார்கள் என்ற நம்பிக்கையில், 'திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷத்தை மனதிலே உச்சரித்துக் கொண்டே காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

