தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டியுள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காகத் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பாரம்பரியத் தொழிலான உப்பு உற்பத்தி மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வரக் கூடாது என்றும், மாற்று இடத்தில் இத்திட்டத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை அவரது இல்லத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தித் தாங்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின்போது உப்பு உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ் சண்முகவேல், சுயம்பு நாடார், பொன்ராஜ், பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

