தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியச் சின்னங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி துறைமுகக் கடற்கரைப் பகுதியில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், சங்கர் காலனியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் சத்திரம், டி.எம்.பி. காலனி கழிவு நீரேற்று நிலையங்களின் செயல்பாடுகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க புனித பிரான்சிஸ் சவேரியர் தேவாலயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, டி.ஆர். நாயுடு தெருவில் அமைந்துள்ள வரலாற்றுப் பாரம்பரியம் வாய்ந்த முத்துநகர் பெண்கள் நல மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த ஆட்சியர், சத்திரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான துணை கழிவு நீரேற்றும் நிலையம் மற்றும் டி.எம்.பி. காலனியில் உள்ள கழிவு நீரேற்றம் உந்து நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். மேலும், சங்கர் காலனியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

tutyCollectorAivu1.jpg

இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டார். நிறைவாக, துறைமுகக் கடற்கரைப் பகுதியில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (CSR) ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.