தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவி புவனா (36). இவர் புதிய துறைமுக மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று புவனா ஆக்டிவா ஸ்கூட்டரில் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, புதிய துறைமுகப் பகுதியில் இருந்து முத்தையாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

முத்தையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான டிப்பர் லாரி புவனாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இக்கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய புவனா, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற 9 வயது மகள் தனஷிகாவிற்கு வலது கையில் லேசான உரசல்கள் ஏற்பட்டு உயிர்தப்பினார்.

விபத்து குறித்துத் தகவலறிந்த தெர்மல் நகர் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த குழந்தையை மீட்டுத் தீவிர சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த புவனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, காமநாயக்கன்பட்டி அருகே உள்ள சால்நாயகன்பட்டியைச் சேர்ந்த வெள்ளையசாமியின் மகன் முனியசாமி (39) என்பவர் மீது தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் கண் முன்னே தாய் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.