தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முனியசாமி (49). இவர் பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) ரவுடி முனியசாமி தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாகத் தென்பாகம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் தென்பாகம் எஸ்.ஐ. சங்கரலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அரிவாளுடன் நின்ற ரவுடி முனியசாமியைப் போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
ஆனால், அவர் கைது செய்யவிடாமல் தடுத்து, அரிவாளைக் காட்டி மிரட்டிப் போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் துரிதமாகச் செயல்பட்டு முனியசாமியைப் பிடித்துக் கைது செய்தனர். இதுகுறித்து எஸ்.ஐ. சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

