தூத்துக்குடி பெருமாள்புரம் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் பணி அரைகுறையாக நின்றுள்ள இந்தச் சாலையின் அருகே சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தினந்தோறும் திறந்தவெளியாகக் கிடக்கும் இந்தச் சாக்கடையைக் கடந்து செல்ல வேண்டிய ஆபத்தான நிலை நீடித்து வருகிறது.

கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள இக்கழிவுநீர் கால்வாய் பணியை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைந்து முடித்துச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தவறும் பட்சத்தில், பெருமாள்புரம் பகுதி மக்களை ஒன்றுதிரட்டி தூத்துக்குடியின் பிரதான சாலையான பாளையங்கோட்டை சாலையில் பெரிய அளவிலான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மக்கள் எச்சரித்துள்ளனர்.