தூத்துக்குடி டி.எம்.டி. காலனி 10-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் இசக்கி ராஜ் (33). இவர் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இசக்கி ராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள நகைக்கடையில் நகைகள் வாங்கியுள்ளார்.
பின்னர் தனது தொழில் தேவைக்காக அந்த நகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க முயன்றபோது, அதில் அதிகளவு உலோகம் கலந்திருப்பதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, "தன்னிடம் போலி நகையைக் கொடுத்து ஏமாற்றி விட்டீர்கள்" என ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடையில் முறையிட்ட இசக்கி ராஜ், இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடமும் புகார் மனு அளித்தார்.
இதற்கிடையே, நகைக்கடை நிர்வாகத்தினர் இசக்கி ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நகைகளுக்கான தொகையான ரூ. 4,22,000-ஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகத் திரும்ப வழங்கியுள்ளனர். மேலும், தங்களது நகையைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட இசக்கி ராஜ் நகையைத் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நகைக்கடை மேலாளரின் மகன் சரவணகுமார் (42) அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையின் முடிவில் இசக்கி ராஜாவைப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கி ராஜா தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 2 நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி இலக்கியா, இசக்கி ராஜாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

