தூத்துக்குடி ஐயப்பன் நகரைச் சேர்ந்த ராஜலிங்கத்தின் மகன் ராஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பர்த்து வருகிறார். தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிவதற்காக, ராஜா மனைவி முத்துமாரி (30), மகன் மதன் (5). ஆகியோருடன் பைக்கில் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவிலை நோக்கிச் சென்றுள்ளார்.
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, சத்யா நகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியது. இக்கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டுத் தலையில் பலத்த காயமடைந்தனர்.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மூவரையும் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

