இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், தமிழகத்தில் ஹாக்கி விளையாட்டில் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில், நமது தூத்துக்குடி மாவட்ட அணி தொடர்ந்து முதல் நான்கு இடங்களை பெற்று வருகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் 7 முதல் 8 வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வாகி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஹாக்கி விளையாட்டின் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த பல வீரர்கள், விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் துறைமுகம், மின்சாரத் துறை, தபால் துறை, ரயில்வே போன்ற மத்திய, மாநில அரசுப் பணிகளில் தேர்வு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஹாக்கி மைதானம் மட்டும் கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்குப் பக்கத்தில் உள்ள தடகள ஓடுதளத்தை (Athletic Track) சீரமைக்கும் பணியானது ஹாக்கி மைதானத்தை பாதிக்கும் வகையிலும், வடக்குப்புறம் நடைபாதையும் (Walking Track)மைதானத்தை ஒட்டி இருக்கிறது.
இதனால் ஹாக்கி மைதானத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவீடு குறைந்து, முறையான போட்டிகளை நடத்தவும், வீரர்கள் பயிற்சி பெறவும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் சிவந்தாகுளம் அரசு பள்ளி, காரப்பேட்டை பள்ளி, கால்டுவெல்பள்ளி, செயின்ட் சேவியர்ஸ் பள்ளி,தஸ்னேவிஸ், செயின்ட் மேரிஸ் கல்லூரி உள்ளிட்ட பல பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் தினமும் காலையும் மாலையும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
எனவே, வீரர்களின் நலன் கருதி, ஹாக்கி மைதானம் பாதிப்படையாத வண்ணம், அதன் முழு அளவீட்டுடன் சீரமைத்துத் தருமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் ஹாக்கி விளையாட்டு மேலும் வளர்ச்சி பெற்று, தூத்துக்குடியில் இருந்து பல இந்திய வீரர்களை உருவாக்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

