18-ஆம் நூற்றாண்டு ராபர்ட் ஓர்ம் வரலாற்று வரைபடம் மூலம் மன்னார் வளைகுடா மற்றும் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்கள் வெளிவந்துள்ளதாக ஆய்வாளர் பெ. இராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா மற்றும் சோழமண்டலக் கடற்கரையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த பெரும் நிலவியல் பேரிடர்கள் மற்றும் நிலத்தட்டு நகர்வுகள் குறித்த முக்கிய ஆதாரங்களை 18-ஆம் நூற்றாண்டு வரலாற்று வரைபடங்கள் மெய்ப்பிப்பதாகத் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் பெ. இராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைப் பொறியாளர் ஜான் கால் தொகுக்க, வரலாற்று ஆய்வாளர் ராபர்ட் ஓர்ம் அவர்களால் 1778-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடத்தில், கீழக்கரை, பட்டினமருதூர் – தருவைக்குளம் மற்றும் காயல்பட்டினம் ஆகிய மூன்று கடற்கரைப் பகுதிகளிலும் இயற்கையான பிரம்மாண்டப் பாதுகாக்கப்பட்ட வளைகுடாக்கள் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
ஆனால், 1863-ஆம் ஆண்டு ஐமே ரோபிகே மற்றும் பிரிட்டிஷ் கப்பற்படை அதிகாரிகள் வெளியிட்ட துல்லியமான கடல் வரைபடத்தில் இந்த மூன்று வளைகுடாக்களும் மறைந்து, நேரான கடற்கரையாகவும், அதற்குப் பதிலாக முயல் தீவு, மணோலி, குருசடி போன்ற தனித்தனி பவளத் தீவுத் திட்டுகளாகவும் பதிவாகியுள்ளன. 1778 முதல் 1863 வரையிலான 85 ஆண்டு இடைவெளியில் பெரிய நில அதிர்வுகளோ ஆழிப்பேரலைகளோ நிகழ்ந்ததாகப் பதிவுகள் இல்லாததால், ஓர்ம் அவர்களின் வரைபடம் பழந்தமிழர் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
நிலப்பரப்புச் சிதைவுகள் - கல்வெட்டு சான்றுகள்:
இராமேஸ்வரம் - தோணித்துறை உருக்குலைவு: ஓர்ம் வரைபடத் தொலைவுகளை நவீன நிலப்பரப்புடன் ஒப்பிடும்போது, மண்டபத்தில் பழைய ராமசாமி ஆலயம் இருந்த பகுதி தொடங்கி பாம்பன் வரையிலான நிலப்பரப்பு 79° தீர்க்கரேகைப் பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவால் இரண்டாக உடைந்து ஆழமான நீரிணையாக மாறியுள்ளது.
மன்னார் தீவு முறிவு மற்றும் நகர்வு: இலங்கையோடு நேரடி நிலத்தொடர்பில் இருந்த மன்னார் பகுதி, எருக்கலம்பிட்டி – மாதோட்டம் பகுதியில் ஏற்பட்ட நில முறிவுகளால் துண்டிக்கப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. மேலும், புத்தளம் பகுதி கிழக்காக விலகிச் சென்றுள்ள நிலத்தட்டு நகர்வும் பதிவாகியுள்ளது.

ஆய்வாளர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு நிறுவியபடி, கி.பி. 822-இல் நிகழ்ந்த மாபெரும் கடல்கோள் காரணமாகப் பன்னிரு நிலங்கள் கடலுக்குள் மூழ்கியதும், கி.பி. 825-இல் கொல்லம் ஆண்டு உருவானதும் வரலாற்று உண்மையாகும். இதற்குச் சான்றாகப் பட்டினமருதூரில் கருங்கல் சாலைகளும், கல்மடுவில் பல்லவர் கால மதில் சுவர்களும், பனையூரில் கடல்சார் படிமங்களும் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன.
மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள ராபர்ட் ஓர்ம் வரைபடத் தொகுப்புகளின் மூல வரைபடங்கள் மற்றும் குறிப்பேடுகளை இந்திய வெளியுறவு மற்றும் கலாச்சார அமைச்சகங்கள் மூலம் முழுமையாக மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இந்தியத் தொல்லியல் துறை (ASI) மற்றும் இந்திய நிலவியல் ஆய்வு மையம் (GSI) இணைந்து, 1778 மற்றும் 1863 வரைபடங்களை ஒப்பாய்வு செய்து, இராமேஸ்வரம், மண்டபம், தூத்துக்குடி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பரப்பில் அதிநவீன புவி ஊடுருவல் ரேடார் (GPR) மற்றும் கடலடி அகழாய்வு ஆய்வுகளை மேற்கொண்டு நமது பழந்தமிழர் நாகரிகத்தின் உண்மை வரலாட்டை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

