தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் மன்றத்தின் சார்பில் அறிவியல் மற்றும் கல்விக் கண்காட்சி இன்று நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் சிந்தனை மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 300-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர். இவை சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

மாணவர்கள் சொந்த முயற்சியில் உருவாக்கிய ரோபோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கெனத் தனித்தனி மொபைல் செயலிகளையும், மாணவர்களின் கல்வி விவரங்களை ஒருங்கிணைக்க 'SFX' என்ற பிரத்யேக செயலியையும் மாணவர்களே வடிவமைத்திருந்தனர்.

'Blue Titan' எனப்படும் நீர்நிலைகளில் மிதந்து சென்று குப்பைகளை அகற்றும் ரோபோ தொழில்நுட்பம் தத்ரூபமாகச் செய்து காட்டப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வணிகவியல் மற்றும் உளவியல் சார்ந்த பல்வேறு புதுமையான படைப்புகளும், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் செயல்முறை விளக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் இக்கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினர். புத்தக அறிவைத் தாண்டி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.