மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நிதி திரட்டும் உயரிய நோக்கத்திற்காகத் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் J.ஜோஷ்வா வசிகரன் 4.39 மணி நேரத்திற்குள் 1,000 Pull-ups மற்றும் 1,000 Squash Drives செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது இச்சாதனை முயற்சி 'சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' (CBWR) மற்றும் 'இன்டர்நேஷனல் அச்சீவர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' ஆகிய அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள 'கேம்ஸ்வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமி'யில் இச்சாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணைத் தலைவர் ராஜா தலைமை தாங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். கேம்ஸ்வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் பாரதி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் பாபு செல்வகுமார் மற்றும் ஜோன் ஜெனிபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேம்ஸ்வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனத் தலைவர் ரைபின் தார்ச்சியூஸ் சிறப்பாகச் செய்திருந்தார்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக லூசியா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கும், நாசரேத் செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தலைமை ஆசிரியை ஜெசி உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
உடல் மற்றும் மன ரீதியாகச் சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்காகத் தன் உடற்பயிற்சித் திறன் மூலம் நிதி திரட்டிய இளைஞர் J.ஜோஷ்வா வசிகரனின் இந்த முயற்சிக்குச் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

