தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி. சுப்புராஜ் மற்றும் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சில மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டுச் சில நபர்கள் அமர்ந்திருந்தனர்.

காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தன்னிடம் இருந்த துண்டுப் பேப்பர்களில் கேரளா மாநில லாட்டரிச் சீட்டு எண்களை எழுதி விற்பனை செய்வதும், பின்னர் விற்பனை முடிந்ததும் ஓரிடத்தில் கூடி விவரங்களைப் பகிர்ந்துகொள்வதும் தெரியவந்தது.

இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆன்ஸ்டன் (42), முத்தையாபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் மகன் நவீன்ராஜா (26), கணேஷ்குமார் மகன் சூர்யா (25), சண்முகசாமி மகன் நாராயணசாமி (40), சுப்பையா மகன் கோபிகண்ணன் (35), இசக்கி முத்து மகன் கண்ணன் (37), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் டெல்லிபாபு (30) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.77,300 ரொக்கம், விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட 10 துண்டுச் சீட்டுகள், 7 ஆண்ட்ராய்டு செல்போன்கள், ஒரு கத்தி, 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.