தூத்துக்குடி சிஜியி காலனியில் இயங்கி வரும் ‘ஸ்ரீமதி கார்கோ’ ஷிப்பிங் நிறுவனத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி மற்றும் டி.டி.எஸ் செலுத்துவதாகக் கூறி, நிறுவன உரிமையாளர் லட்சுமண விக்னேஷிடம் இருந்து ரூ.1,23,49,258 பணத்தைக் கையாடல் செய்ததாக கணக்காளர் மாரியப்பன் (எ) கண்ணன் என்பவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.

விக்னேஷின் நிறுவனத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் (எ) கண்ணன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாகக் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். நிறுவனத்தின் வருமான வரி, ஜி.எஸ்.டி மற்றும் டி.டி.எஸ் தொடர்பான அனைத்து கணக்குகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கடந்த 2024 ஏப்ரல் 5 முதல் 2026 ஜூலை 31 வரை, அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறி, நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் மாரியப்பன் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 1,23,49,258 அனுப்பப்பட்டது.

கடந்த 31.07.2026 அன்று டிடிஎஸ் தொகையாக ரூ.1,16,734 செலுத்தியதாக மாரியப்பன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய ரசீதில் பிழைகள் இருந்ததால் சந்தேகம் எழுந்ததை அடுத்து, வருமான வரித்துறையிடம் நேரில் விசாரித்தபோது, அவை அனைத்தும் கணினியில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ரசீதுகள் என்பது தெரியவந்தது.

நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தொகையைத் தனது மனைவி மீனா, மகள்கள் சிதம்பர வினிதா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் ஸ்ரீனிவாஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் சிவசங்கர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு மாரியப்பன் மாற்றிப் மோசடி செய்தது தெரியவந்தது.

மோசடி குறித்துத் தட்டிக் கேட்டு, பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் லட்சுமண விக்னேஷிற்கு ஆட்களை வைத்துக்கொலை செய்துவிடுவதாகவும், பொய் வழக்கில் மாட்டிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்துப் பாதிக்கப்பட்ட உரிமையாளர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தார்.

இதையடுத்து, மாரியப்பன், அவரது மனைவி மீனா, மகள்கள் சிதம்பர வினிதா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் சிவசங்கர் ஆகிய 5 பேர் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிவசங்கர் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.