தூத்துக்குடி மீளவிட்டான் இரயில் நிலையத்தில் இருந்து துறைமுகத்திற்கும், ஸ்பிக் நிறுவனத்திற்கும் சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயிலுக்காக மடத்தூர் செல்லும் வழியில் அந்த காலத்தில் ஒரு வழிப்பாதை அளவுக்கு கேட் அமைக்கப்பட்டது.

இந்த பிரதான சாலை வழியாக தூத்துக்குடி நகரம், மடத்தூர், சிப்காட், முருகேசன் நகர், திரவியரத்ன நகர், உத்திரபாக்கியம் நகர், வேலவன் நகர் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், விவசாயிகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் இந்த கேட்டை கடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ரயில்வே கேட் மிகவும் குறுகலாகவும், இருபுறமும் அகலப்படுத்தப்படாமலும் இருப்பதால், ரயில் கடக்கும் நேரங்களில் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கேட் திறக்கப்பட்ட பின்பும் குறுகலான பாதை காரணமாக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி நேரத்தில் இந்த நெரிசல் உச்சத்தை அடைவதாகவும், இதனால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி - மடத்தூர் பிரதான சாலையில் உள்ள ரயில்வே கேட்டை உடனடியாக அகலப்படுத்தவும், தேவைப்பட்டால் மேம்பாலம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகமும், ரயில்வே துறையும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.