தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையின்போது வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவ அலட்சியம் உள்ளதாகக் கூறி, இதுகுறித்துச் சுயாதீன விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் கோரி உயிரிழந்தவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி கதிர்வேல் நகர், விஷ்ணுபுரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பூமாதேவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "கடந்த 05.11.2026 அன்று ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த எனது கணவர் செந்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்.
வயிற்றில் வீக்கம் இருந்ததால் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், கல்லீரல் பகுதியில் இரத்தக் கசிவு இருப்பதாகவும், அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் யூரியா அளவு அதிகமாக இருப்பதாக ஸ்கேன் மைய ஊழியர்கள் எச்சரித்திருந்த நிலையில், அதுகுறித்து உரிய மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்டதா என்பதில் சந்தேகம் உள்ளது.
கடந்த 09.11.2026 அன்று மதியம் 12 மணியளவில் அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்த எனது கணவர், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 'பல்ஸ் குறைந்துவிட்டது, இரத்தப்போக்கு அதிகமாகிவிட்டது' எனக் கூறி உயிரிழந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டார்.
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ததாலேயே இவ்வுயிரிழப்பு நேரிட்டுள்ளது. 2 வயது குழந்தையுடன் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் எங்களுக்கு நீதி கிடைக்க, இம்மருத்துவமனைக்குத் தொடர்பில்லாத நிபுணர்களைக் கொண்ட சுயாதீன மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மேலும், சிகிச்சை ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளைப் பாதுகாத்து, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும்."இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

