தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் பயணிகளுக்கு இசிஎஸ் (ECS) முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் நேரடியாக மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் "ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005" என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.01.2027 ஆகும்.

கிறிஸ்தவ மதப் பயனாளிகள் இத்திட்டத்தினைப் பயன்படுத்திப் பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.