தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான சாலை சேதம், குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு, தெருவிளக்கு பழுது, குப்பைகள் அகற்றப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக புகார் தெரிவிக்கும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காக இந்தச் செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது, செயலி முறையாகச் செயல்படாமல் இருப்பதும், புகார்களைப் பதிவு செய்ய முடியாத நிலையும், தொழில்நுட்பக் கோளாறுகளால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் டிஜிட்டல் நிர்வாகம், நவீன தொழில்நுட்பம் என்று மாநகராட்சி நிர்வாகம் கூறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் பொதுமக்கள் தங்களது அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட புகாராகத் தெரிவிக்க முடியாத அவலநிலை நிலவுகிறது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட புகார் செயலியே செயல்படாமல் இருந்தால், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் தெரிவிப்பது? மாநகராட்சி நிர்வாகம் மக்களின் குறைகளைக் கேட்பதற்குத் தயாராக இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், புகார் தெரிவிப்பதற்கான செயலியும் செயல்படாதது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உடனடியாகத் தலையிட்டு,

பொதுமக்கள் புகார் அளிக்கும் மாநகராட்சி செயலியில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

பொதுமக்கள் எளிதாகப் புகார்களைப் பதிவு செய்யும் வகையில் செயலியை மேம்படுத்த வேண்டும்.

செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண வேண்டும்.புகார் அளித்த பொதுமக்களுக்கு புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குறுஞ்செய்தி வாயிலாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

செயலி செயல்படாத காலத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் மாநகராட்சி நிர்வாகம், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான அடிப்படைப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

பொதுமக்களின் குறைகளைத் தெரிவிக்கும் செயலியே செயல்படாத அவலநிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் புகார்களைப் பெறுவதற்கும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்எஸ் முத்து வலியுறுத்தியுள்ளார்.