தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தூத்துக்குடி தாலுகாவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான நில எடுப்பு மற்றும் நில உரிமை மாற்றத்திற்கு அனுமதி வழங்கி, தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி தாலுகாவிற்குட்பட்ட மூன்று கிராமங்களில் மொத்தம் 1,040.59.50 ஹெக்டேர் (சுமார் 2,570.27 ஏக்கர்) நிலம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது: 994.15.00 ஹெக்டேர் (சுமார் 2,456.55 ஏக்கர்) பரப்பளவுள்ள பட்டா நிலங்கள் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம் மற்றும் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்தப்பட உள்ளன.
46.44.50 ஹெக்டேர் (சுமார் 114.72 ஏக்கர்) பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் செய்யப்பட உள்ளன. கிராம வாரியாக, முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 53.90.50 ஹெக்டேர், வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் 321.60.00 ஹெக்டேர் மற்றும் குமாரகிரி / நிம்மராஜபுரம் பகுதிகளில் 665.09.00 ஹெக்டேர் என மொத்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் நில எடுப்புப் பணிகளுக்கான உத்தேச செலவினமாக ரூ. 348 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 701 நிதி ஒதுக்கீடு செய்யவும், நிர்வாக அனுமதி வழங்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பியிருந்தார். நிதித்துறையின் ஒப்புதலோடு இதற்கான அரசாணையைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் பிறப்பித்துள்ளார்.
மேலும், நில எடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த தனி தாசில்தார்கள் தலைமையிலான 6 நில எடுப்பு அலகுகளில் 78 பணியாளர்களும், தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான கண்காணிப்பு அலகில் 8 பணியாளர்களும் என மொத்தம் 86 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய அதிகாரிகளை நியமித்து, சிப்காட் தொழிற்பூங்காவை உருவாக்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

