தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த மீனவர் தம்பிராஜ் (62), கடந்த 6-ஆம் தேதி சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கடற்கரையிலிருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதில் நிலைதடுமாறிய தம்பிராஜ் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். இதையடுத்து, சக மீனவர்கள் அவரைத் தேடினர். இருப்பினும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் தம்பிராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. புதன்கிழமை தம்பிராஜின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திரேஸ்புரம் பகுதி திமுக செயலர் நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மாமன்ற உறுப்பினர்கள் மெட்டில்டா, பவானி மார்ஷல், வட்டச் செயலர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

